தமிழ்நாடு

வாக்கு மையத்தில் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம் - மதுரை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்!

மதுரையில் வாக்குப்பதிவான இயந்திரங்கள் உள்ள மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்கு மையத்தில் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம் - மதுரை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவான இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம் குறித்து உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரின் உதவியாளர் அறிவுறுத்தலின் அடிப்படையில் பெண் தாசில்தார் வாக்கு மையத்தில் நுழைந்ததாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, வட்டாட்சியர் சம்பூர்ணம் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவரின் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கமுடியாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவரின் உதவியாளர் ஆகிய இருவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம், புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜனை நியமித்துள்ளது. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி குருசந்திரனை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம், சாந்தகுமாரை நியமித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையர் மோகன்தாஸ் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

banner

Related Stories

Related Stories