தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்று சுழற்சியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது.
இந்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்நிலையில் சற்றுமுன்பு, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. தற்போது உருவாகியிருக்கும் புயலுக்கு ‘ஃபனி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபனி புயல் வட தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் 30-ம் தேதி வரும் என்றும் வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.