தமிழ்நாடு

தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதலின்றி இயங்கும் 365 மருத்துவமனைகள் ! 

தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதலின்றி 365 மருத்துவமனைகள் இயங்குகின்றது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதலின்றி இயங்கும் 365 மருத்துவமனைகள் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி சென்னையை சேர்ந்த சண்முகம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த மார்ச் 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ பின்பற்றும் மருத்துவமனைகள் எத்தனை? பின்பற்றாத மருத்துவமனைகள் எத்தனை? விதிகளின்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதலின்றி மற்றும் மருத்துவக் கழிவுகளை கையாள்வதற்கான அனுமதியின்றி செயல்படும் மருத்துவமனைகள் எத்தனை? என்ற விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விரிவான அறிக்கை ஒன்றை பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 463 அரசு மருத்துவமனைகள், 3844 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 4307 மருத்துவமனைகள் உள்ளன. தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை இன்றி 365 மருத்துவமனைகள் இயங்குகின்றன. அதில் 51 அரசு மருத்துவமனைகள், 314 தனியார் மருத்துவமனைகள் ஆகும். 3மருத்துவமனைகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

மருத்துவக் கழிவுகள் கையாள்வதற்கான அனுமதியின்றி செயல்படும் மருத்துவமனைகள் 715. அதில் அரசு மருத்துவமனைகள் 95, தனியார் மருத்துவமனைகள் 620.11அரசு மருத்துவமனைகள், 106 தனியார் மருத்துவமனைகளின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இதுவரை விதிகளைப் பின்பற்றாத 12 அரசு மருத்துவமனைகள், 88 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த உத்தரவில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பாயம் அளித்த உத்தரவை பின்பற்ற மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக நடவடிக்கை எடுக்கவில்லை. எத்தனை மருத்துவமனைகள் கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றுகின்றன? பின்பற்றாத மருத்துவமனைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?மருத்துவமனைகள் எப்படி கண்காணிக்கப்படுகிறது? என்ற விபரங்களை ஒரு மாதத்திற்குள் தமிழக அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனக்கூறி நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜுலை 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories