முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான (M.E., M.Tech.,) பொது நுழைவுத்தேர்வை (TANCA) நடத்த அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கையை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே மறுப்பு தெரிவித்த நிலையில் பி.இ, பி.டெக் நுழைவுத்தேர்வை இந்த ஆண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.
இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுப் பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, எம்.இ., எம்.டெக் படிப்புகளுக்கான TANCA நுழைவுத்தேர்வையும், எம்.சி.ஏ, எம்.பி.ஏ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மற்றும் கலந்தாய்வுப் பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு மட்டும் நுழைவுத்தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.