தமிழ்நாடு

சுற்றுச்சூழலை பாதிக்கும் ஆலையை மூடக்கோரி வழக்கு!

சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மருத்துவக் கழிவுகள் அழிக்கும் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வழக்கு.

File Image
File Image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் மருத்துவக் கழிவுகள் அழிக்கும் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி காஞ்சிபுரம் மாவட்டம் கிணார் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

“தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான மருத்துவக் கழிவுகளை அழிக்கும் ஆலை, காஞ்சிபுரம் மாவட்டம் கிணார் கண்டிகை கிராமத்தில் 2009-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கழிவுகள் அழிக்கப்படும்போது வெளிப்படும் நச்சுப்புகையால் மூச்சுத்திணறல், தோல் நோய் ஆகியவை ஏற்பட்டு வருகிறது.

இந்த ஆலையின் பாதிப்பால் சுற்றிலுமிருக்கும் 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலை இயங்க ஆரம்பித்தபின் இருவர் புற்றுநோய்க்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இந்த ஆலையில் ஒரு நாளைக்கு 6,500 கி.கி மருத்துவக் கழிவுகளை மட்டுமே அழிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியளித்துள்ளது. ஆனால் அனுமதியை மீறி 9,760 கி.கி கழிவுகளை அழித்து வருவது அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கை மூலம் தெரியவருகிறது.

இதை எதிர்த்து பல முறை போராட்டங்கள் நடத்தியும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே, ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, முதல்வர் மற்றும் பிரதமர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி ஜெனேரேட்டர்கள் மூலம் தொடர்ந்து ஆலை இயக்கப்பட்டு வருகிறது” என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் சுந்தர்ராஜ்.

இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆலை அருகில் ஆறு மற்றும் விவசாய நிலங்கள் இருப்பதை மறைத்து ஆலைக்கான உரிமம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. விசாரித்த நீதிபதிகள், ஆலையால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த முழு விவரங்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தியும், தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் ஆலை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

banner

Related Stories

Related Stories