முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அதிகாரம் பெற்ற அமைப்பு லோக் ஆயுக்தா. தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்கவும், அதன் உறுப்பினர்களை நியமிக்கவும் தமிழக அரசு காலதாமத்தப்படுத்தி வந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து 18-வது மாநிலமாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் இன்று பதவியேற்றார். மேலும் இந்த அமைப்பில் 4 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்தவழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இடம் பெற்றிருந்தார். ஆனால், அந்த குழு ஆளுங்கட்சியினரை பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் குழுவாக இல்லை. இதனால் உறுப்பினர்களை தேர்வு நியாயமாக நடக்காது என்பதால், அந்த கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்க முடியாது என்று விலகியது குறிப்பிடத்தக்கது.