கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.ஆர்.பி அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதனை, 2 கி.மீ தூரத்தில் உள்ள செல்வபுரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் உத்தரவு பிறப்பித்தார். மாநகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆர்.எஸ்.புரம் பள்ளிக்கு மாற்றம் கோரி மல்லிகா என்ற தலைமை ஆசிரியை அளித்த கோரிக்கையை ஏற்று, அப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் இடமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும், ரங்கநாதன் தற்போது உள்ள பள்ளியில் இருந்து 2 கிமீ துரத்தில் உள்ள வேறு ஒரு மாநகராட்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்ததால் அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனக் கூறி ரங்கநாதனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், நீதிபதி தனது உத்தரவில், அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர்கள், பணலாபத்திற்காக தனியாக டியூஷன் எடுக்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முரணானது. இதுபோல் தனியாக டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களைக் கண்காணித்து, விதிகளைப் பின்பற்றி அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அரசை மிரட்ட, போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் என வேதனை தெரிவித்த நீதிபதி இளைய சமுதாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற ஆசிரியர்களின் மீது எந்த விதமான கருணை காட்டாமல் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில், சமீபகாலமாக ஒழுங்கின்மை, சட்டவிரோத நடவடிக்கைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுதொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தொலைபேசி எண்ணை அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களின் அறிவிப்புப் பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும். இந்த தொலைபேசி எண் பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் பெரிய எழுத்துகளில் இடம்பெற வேண்டும். புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை தமிழக அரசு எடுக்கப்படவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தனியாக டியூஷன் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் வணிக லாபத்தை முக்கியமாகக் கொண்டு செயல்படும் ஆசிரியர்களுக்கு எதிராகவும் அந்த இலவச தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் என்ற குறிப்பிட்டுள்ள நீதிபதி அந்த ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.