இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக செயப்பட்ட இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளும், ஜடேஜா 5 விக்கெட்டுகளும், பும்ரா 5 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். மேலும் அஸ்வின், கில், பண்ட் ஆகியோர் சதமடித்தும் அசத்தினர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டாவது, மூன்றாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸ்சில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டம் ஆடியது.
களமிறங்கிய அனைத்து இந்திய வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, வெறும் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்சை ஆடிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இறுதிநாளில் அதனை 3 விக்கெட்களை இழந்து எட்டிய இந்திய அணி வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.