பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், வீரர் ஒருவர் தனது பிடிவாதத்தால் தங்கப்பதக்கத்தை இழந்துள்ள நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் நியூஸிலாந்து வீரர் ஹமிஷ் கெர் மற்றும் அமெரிக்க வீரர் மெக்இவான் ஆகியோர் 2.36 மீட்டர் உயரத்தை தாண்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். அதனைத் தொடர்ந்து தங்கப்பதக்கத்தை வெல்பவரை தீர்மானிக்க 2.38 மீட்டர் உயரம் தாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அந்த இலக்கை ஹமிஷ் கெர், மெக்இவான் ஆகிய இருவராலும் தாண்ட முடியாத நிலையில், தங்கப்பதக்கம் இருவருக்கும் பிரித்து வழங்கும் நிலை ஏற்பட்டது. இதனை ஹமிஷ் கெர் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டாலும், அதனை அமெரிக்க வீரர் மெக்இவான் ஏற்க மறுத்தார்.
இதனால் 2.36 மீட்டர் என இலக்கு குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் ஹமிஷ் கெர், மெக்இவான் ஆகிய இருவராலும் இந்த இலக்கை தாண்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மீண்டும் தங்கப்பதக்கம் இருவருக்கும் பிரித்து வழங்கும் நிலை ஏற்பட்டும் அதனை மீண்டும் அமெரிக்க வீரர் மெக்இவான் மறுத்தார்.
இதனைத் தொடர்ந்து 2.34 மீட்டர் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட, தனது வாய்ப்பில் அமெரிக்க வீரர் மெக்இவானால் இதனை தாண்ட முடியாமல் போனது. தொடர்ந்து தனது வாய்ப்பில் நியூஸிலாந்து வீரர் ஹமிஷ் கெர் 2.34 மீட்டர் இலக்கை வெற்றிகரமாக தாண்டிய நிலையில், அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அமெரிக்க வீரர் மெக்இவானுக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.