கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகள் கலந்துகொள்கின்றன.
மேலும் முக்கிய அணிகளான பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, குரோஷியா போன்ற வலுவான அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில், போர்த்துக்கல் - துருக்கி அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் பெர்னாண்டோ சில்வா தனது அணிக்காக முதல் கோலை அடித்து முன்னிலை பெற்று தந்தார்.
பின்னர் 28 வது நிமிடத்தில் துருக்கி அணி ஒரு மோசமான சுய கோலை அடிக்க போர்த்துக்கல் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தின் போது 55-வது நிமிடத்தில் போர்த்துக்கல் கேப்டன் ரொனால்டோ கொடுத்த பாஸை புருனோ பெர்னாண்டஸ் கோலாக்கினார். இறுதியில் போர்த்துக்கல் அணி 3-0 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தியது.
மற்றொரு லீக் போட்டியில் பெல்ஜியம் அணி ரோமானியா அணியை சந்தித்தது. இதில் ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே டியலிமான்ஸ் தனது அணிக்காக கோல் அடித்தார். பின்னர் 79-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி கேப்டன் கெவின் டி ப்ரூய்ன் மற்றொரு கோல் அடித்தார். இறுதியில் பெல்ஜியம் அணி ரோமானியா அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு லீக் ஆட்டத்தில் செக் குடியரசு - ஜார்ஜியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.