அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்காவின் நியூயார்க், டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. ஆனால் இங்குள்ள மைதானங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்துள்ளது.
நியூயார்க் மைதானத்தில் இரண்டே மாதங்களில் 34,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமான மைதானம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அங்கு பயிற்சி மேற்கொள்ள போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
அதே போல நியூயார்க், டெக்சாஸ் மற்றும் பிளோரிடா ஆகிய மூன்று மைதானங்களிலும் ஏராளமான குறைகள் இருந்ததாக தொடர் புகார் எழுந்தது. மேலும் புளோரிடாவில் நடந்த போட்டிகள் சில மழை காரணமாக கைவிடப்பட்டன. இதற்கு அங்கு மைதானத்தையும் மூடுவதற்குத் தேவையான வசதிகள் இல்லாததே காரணமானது.
இந்த நிலையில், முழு மைதானத்தையும் மூடும் வகையில் கவர்களை வைத்திருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் ஐசிசி அமைப்பை விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "சில போட்டிகள் மழை காரணமாக ரத்தானது. மொத்த மைதானத்தையும் மூடுவதற்குத் தேவையான கவர் வசதிகள் ஒரு மைதானத்தில் இருக்கவேண்டும்.
அந்த வசதி இல்லாத மைதானத்தில் போட்டியை நடத்தக்கூடாது. உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதன் மூலம் நிச்சயம் உங்களுக்கு பணம் கிடைக்கும். அதனால் உங்களிடம் பணம் இல்லை என்று சொல்ல முடியாது.வெகுதூரத்தில் இருந்து போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட்டை காட்டவேண்டும். அமெரிக்காவில் இத்தனை ஸ்டார் வீரர்கள் ஆடும் தொடரை இனி எப்போது வரும் என்று சொல்ல முடியாது"என்று கூறியுள்ளார்.