உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்ற எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அங்கும் தனது திறமையை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் தொடர்ந்து உள்ளுர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.இதனால் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் வாய்ப்பு வழஙகப்பட்டது.
அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்றார். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-ம் இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 12 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 527 ரன்களை குவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான வளரும் வீரர் (Emerging Player ) விருது சாய் சுதர்சனுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த விருது ஹைதராபாத் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வழங்கப்பட்டது. நிதிஷ் குமார் ரெட்டி இந்த தொடரில் 15 போட்டிகளில் 303 ரன்களையும், 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
ஆனால் சாய் சுதர்சன் நிதிஷ் குமார் ரெட்டியை விட 3 போட்டிகள் குறைவாக ஆடியும், அவரை விட 224 ரன்கள் அடித்துள்ளார். ஒருவேளை நிதிஷ் குமார் ரெட்டி வீழ்த்திய 3 விக்கெட்களுக்காகவும் சேர்ந்துதான் இந்த விருது வழங்கப்பட்டது என்று சொன்னாலும் 224 ரன்களை விட 3 விக்கெட் பெரியதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் வேண்டுமென்றே ஐபிஎல் குழுவினர் சாய் சுதர்சனுக்கு கொடுக்க வேண்டிய விருதை நிதிஷ் குமார் ரெட்டிக்கு கொடுத்ததாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.