உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்ற எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன் தொடர்ந்து உள்ளுர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.
இதனால் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் வாய்ப்பு வழஙகப்பட்டது. அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்றார். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதிலும் சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தினார். அதுமட்டுமின்றி இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் சாய் சுதர்சன் தகர்த்தெறிந்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் 31 இன்னிங்களில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், சாய் சுதர்சன் 25 போட்டிகளில் 1000 ரன்களை எட்டி சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டின் சாதனையை உடைத்தெறிந்துள்ளார்.
இந்த நிலையில், சாய் சுதர்சனைப் பற்றி நாம் இன்னும் அதிகமாகப் பேச வேண்டும் என முன்னாள் தென்னப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "குஜராத் அணி சாய் சுதர்சனை ஓப்பனிங் இறக்கியது அற்புதமான முடிவு. கில் மற்றும் சுதர்சன் இடையேயான பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருக்கிறது.
சாய் சுதர்சன் சிறப்பாக ஆடியும் அதிக பெரிய வெளிச்சம் பெறாமல் அதிகம் பேசப்படாமல் இருக்கிறார். நடப்பு சீசனில் குஜராத் அணிக்காக அதிக ரன்களை குவித்திருப்பது அவர்தான். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை குவித்திருக்கும் இந்திய வீரரும் இவர்தான்.சச்சினை விட ஆறு இன்னிங்ஸ்கள் குறைவாகவே இந்த மைல்கல்லை எட்டிவிட்டார்.சாய் சுதர்சனைப் பற்றி நாம் இன்னும் அதிகமாகப் பேச வேண்டும்" என்று கூறியுள்ளார்.