கடந்த 2019-ம் ஆண்டு மும்பையில் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 66 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இதன் இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி அப்போது 14 வயதான தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
14 வயது வீரர் Under 18 உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்றது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரக்ஞானந்தா இந்திய அளவில் பேசப்பட்டார். அதனைத் தொடர்ந்து உலகின் நம்பர் 1 வீரரும் முன்னாள் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்து உலகையே ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.
பின்னர் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இப்படி தொடர் சாதனைகளை நிகழ்த்திவரும் பிரக்ஞானந்தா செஸ் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இந்த நிலையில், உலக சாம்பியனும் நம்பர் 1 செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தியுள்ளார். போலந்தில் சூப்பர் பெட் ராபிட் மற்றும் பிலிட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிரது. இந்த போட்டியில் கார்ல்சன் - பிரக்ஞானந்தா மோதினர். இதில் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தி புள்ளிபட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த தொடரில் சீனாவை சேர்ந்த வீய் 20.5 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதலிடத்திலும், கார்ல்சன் 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த கார்ல்சன் பிரக்ஞானந்தாவிடம் மோதியபோது, தமது நரம்பு மண்டலம் திடீரென்று சரியாக செயல்படவில்லை என்று கூறியுள்ளார்.