கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த போட்டியில் 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.
அதன்பின்னரும் அந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்னர் நடைபெற்ற உள்நாட்டு தொடர்களிலும் உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்தார். அதன் பின்னர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார். இதனால் அடுத்து மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் அவர் இடம்பிடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரிங்கு சிங்கிற்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கான காரணத்தை இந்திய முன்னாள் வீரர் கங்குலி வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "உலகக்கோப்பை டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸ் , அமெரிக்காவில் நடைபெறுகிறது. அங்கு விக்கெட் கொஞ்சம் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் வகையிலும் இருக்கும்
இதனால்தான் தான் உலக கோப்பை அணியின் தேர்வாளர்கள் இன்னொரு ஸ்பின்னருடன் செல்லலாம் என்று முடிவு செய்திருப்பார்கள். அதனால் தான் ஒருவேளை ரிங்கு சிங்கிற்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். ஆனால் இது விடும் ஆரம்பம் தான். அவர் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார்"என்று கூறியுள்ளார்.