தமிழ்நாடு வீரர் நடராஜன் TNPL தொடரில் தான் வீசிய சிறப்பான யார்க்கர்களால் ஐபில் தொடரில் கால் பதித்தார். சன்ரைசர்ஸ் அணியில் அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கருமே பேசுபொருளாகியிருந்தது. அந்த ஐ.பி.எல் சீசன் முடிந்த உடனேயே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மட்களிலுமே இந்திய அணிக்கு அறிமுகமாகி சிறப்பாகவும் செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காயமடைந்தார்.
பின்னர் கடந்த ஐபில் தொடரிலும் சிறப்பாகவே செயல்பட்டார். எனினும் அடுத்தடுத்து அவர் காயம் அடைந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்ததால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. எனினும் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் நடப்பு நடை ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறார். இதனால் அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் இடம்பெற நடராஜன் தகுதியானவர் என முன்னாள் இலங்கை ஜாம்பவான் வீரர் முரளிதரன் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவரிடம் நடராஜன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "இலங்கையை சேர்ந்த நான் இந்திய அணி தேர்வு விவகாரத்தில் பதில் சொல்வது சர்ச்சையாக முடிந்துவிடும். நடராஜன் கடந்த 5 ஆண்டுகளாகவே நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்.
விக்கெட் எடுக்கும்போது மட்டும்தான் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். மற்ற சமயங்களில் அமைதியாக இருக்கிறார்கள்.கடந்த சீசனில் அவருக்கு காயங்கள் இருந்தன. இந்த சீசனில் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். நன்றாக வீசி விக்கெட்டுகளும் எடுக்கிறார். உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு அவர் அழைக்கப்படுவாரா எனபது எனக்குத் தெரியாது. ஆனால், நடராஜன் அதற்குத் தகுதியானவர்"என்று கூறியலார்.