ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய வீரரான ஷஷாங்க் சிங் என்பவரை அடிப்படை விலையான ரூ.10 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஷஷாங்க் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாக ஏலதாரர் மல்லிகா அறிவித்தார்.
ஆனால், அப்போது தான் தாங்கள் தவறான ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்த விவரம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தெரியவந்தது.அதாவது 19 வயதான ஷஷாங்க் சிங் என்பவரை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. அதன் படி ஷஷாங்க் சிங் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டதும் அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால், அதன் பின்னரே அவர் 32 வயதுடைய மற்றொரு ஷஷாங்க் சிங் என்பது தெரியவந்துள்ளது.
இதனை உடனடியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலதாரர் மல்லிகாவிடம் கூறினாலும், ஒருமுறை ஏலத்தில் எடுத்துவிட்டால் அதனை மாற்றமுடியாது என்ற விதிமுறையை கூறி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார். இந்த நிகழ்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பை பெற்ற ஷஷாங்க் சிங் அதிரடியாக ஆடி 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசி 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போதே அவர் ஆட்டம் கவனிக்கப்பட்டது.
அதனித்த தொடர்ந்து குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். சிறப்பாக ஆடிய ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஏலத்தில் நடந்தது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி சிந்தா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில். "அன்று ஏலத்தில் நடந்ததை பற்றிப் பேசுவதற்கு இன்று சரியான நாள் என்று நினைக்கிறேன். இது போன்ற சூழ்நிலையில் பலரும் நம்பிக்கை இழந்திருப்பார்கள், . ஆனால், சஷாங்க் மற்றவர்களைப் போல இல்லை. உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷலான மனிதர்.
ஒரு திறமையான வீரராக மட்டுமல்லாமல் பாசிட்டிவ்வான அணுகுமுறை கொண்ட மனிதராக மன வலிமையுடன் செயல்பட்டிருக்கிறார். அந்தச் சம்பவம் குறித்து வந்த அனைத்து கருத்துகளையும் விமர்சனங்களையும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டார். அவை எதுவுமே அவரை பாதிக்கவில்லை. தன்னம்பிக்கையுடன் உழைத்து இன்று தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
வாழ்க்கை நமக்கு எதிர்பார்க்காத திருப்பங்களைத் தரும்போது தன்னம்பிக்கையுடன் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் உங்களுக்குள் இருப்பவன் என்ன சொல்கிறான் என்பதை மட்டும் கேட்டுச் செயல்படவேண்டும் என்பதற்கு சஷாங்க் ஓர் உதாரணம். இந்தப் போட்டியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நீங்கள் நிச்சயம் ஆட்டநாயகனாக இருக்கப்போகிறீர்கள் சஷாங்க்" என்று கூறியுள்ளார்.