இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில், ஒரு கேப்டனாக எப்படி இருக்க வேண்டும் என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளேன் என பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளேஸிஸ் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர். "ஒரு கேப்டனாக எப்படி இருக்க வேண்டும் என்பதை தோனியிடமிருந்தும், ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடமிருந்தும்தான் கற்றுக் கொண்டேன்.எப்போதுமே தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டன் அவருடன் சில ஆண்டுகள் ஒன்றாகப் பழகியது எனது அதிர்ஷ்டம்.
நான் தோனிக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். தோனி என் உடன் பிறந்த சகோதரன் போன்றவர் . ஒருபக்கம் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அவர் தோற்கக்கூடாது என்ற எண்ணமும் எனக்கு உள்ளது. அந்த அளவிற்கு அவர்மேல் எனக்கு மரியாதை இருக்கிறது" என்று கூறியுள்ளார்.