இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளரான திகழ்ந்து வருகிறார்.
இந்திய அணியில் மணிக்கட்டு பந்துவீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில், ஆப்-ஸ்பின் பந்துவீச்சாளரான இவர் தற்போது வரை இந்திய அணியில் நீடித்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர் என சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்டார் அஸ்வின்.
எனினும் கிடைத்த வாய்ப்புகளில் தனது திறனை வெளிப்படுத்தி கடந்த உலகக்கோப்பை டி20 தொடர், மற்றும் இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் என இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தினார். அதிலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாகவே செயல்பட்டார்.
இந்த நிலையில், இன்று தரம்சாலாவில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதன் மூலம் 100-டெஸ்ட் போட்டிகள் என்ற சாதனையை படைத்துள்ளார். 6 நவம்பர் 2011-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்டில் அறிமுகமான அஸ்வின் தற்போதுவரை இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
சுமார் 13 ஆண்டுகாலம் இந்திய டெஸ்ட் அணியின் தவிர்க்கவேமுடியாத வீரராக வலம்வரும் அஸ்வின், நம்பர் 1 பந்துவீச்சாளர் என்ற பெருமையை நீண்ட காலம் தக்கவைத்துள்ளார். அதோடு இந்தியாவுக்காக வேகமாக 50,100,150,200,250,300,350,400,450,500 விக்கெட்டுகளை எடுத்த வீரராகவும் அஸ்வின் திகழ்ந்து வருகிறார்.
கும்ப்ளேவுக்கு பின் அடுத்த விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளராகவும், இந்தியாவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளராகவும் அஸ்வின் சாதனை படைத்துள்ளார். மேலும், 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடும் முதல் தமிழ்நாடு வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். அஸ்வினுக்கு பல்வேறு வீரர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.