உள்நாட்டில் நடக்கும் புகழ்பெற்ற ரஞ்சி தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. எப்போதுமே 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தும் தமிழ்நாடு அணி ரஞ்சி தொடரில் தொடர்ந்து மோசமான செயல்பாட்டையே தந்து வருகிறது.
அதிலும் கடந்த 6 ஆண்டுகளாக காலிறுதிக்கு கூட செல்லாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. இதன் காரணமாக தமிழ்நாடு அணியை பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், சாய் கிஷோர் தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பையில் பங்கேற்றது
இதில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. தொடர்ந்து காலிறுதியில் சௌராஸ்டிரா அணியை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி மும்பை அணிக்கு எதிராக தற்போது ஆடி வருகிறது.
தமிழ்நாடு அணியின் இந்த சிறப்பான செயல்பாட்டுக்கு அணி தலைவர் சாய் கிஷோர் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். மும்பை அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த ரஞ்சி கோப்பை தொடரில் 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார். அதோடு ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முன்றாவது தமிழ்நாடு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதன் காரணமாக அவர் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.