இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து சற்று இடைவெளிக்கு பிறகு முன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் அறிமுகம் ஆகினர். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. 10 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கில் ரன் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரஜத் படிதார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 33-3 என்று தத்தளித்தது. எனினும் பின்னர் வந்த ஜடேஜா ரோஹித் ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்திய அணியை மீட்டனர். 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த கூட்டணியில் சதம் அடித்த ரோஹித் சர்மா 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த அறிமுக வீரர் சர்ஃபராஸ் கான் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டம் ஆடினார். 48 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர் 62 ரன்கள் குவித்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜடேஜா சதம் விளாசினார். இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஜடேஜா 110 ரன்களுக்கும், குல்தீப் 1 ரன்களுக்கும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.