ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.
சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். அதோடு ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா பெற்றுள்ளார்.
இந்த நிலையில், தற்போதைய நிலையில், பும்ரா வெறித்தனமாக பந்துவீசுகிறார் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இந்திய மைதானங்களில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையிலும் பும்ரா நம்ப முடியாத வகையில் வெறித்தனமாக பந்துவீசுகிறார்.
நீங்கள் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதற்கு அதிகமான உழைப்புடன் உடல் மற்றும் மனதளவிலான அழுத்தத்தை சமாளிப்பது முக்கியமானதாக இருக்கிறது. அவர் நீண்ட காலம் விளையாடும் போது மேடு பள்ளங்கள் வரலாம். அவர் சில காயங்களை சந்தித்தாலும் அதிலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடுவது அபாரமானதாகும்" என்று கூறியுள்ளார்.