உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையிலிருந்த டிவைடரில் கார் மோதியது. இதனால் காரும் உடனே தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த காயத்தில் இருந்து மீண்டு இவர் பயிற்சியில் ஈடுபட சுமார் ஒரு ஆண்டு தேவைப்படும் என கூறப்பட்டது.
இதனிடையே தற்போது காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு குறைந்த அளவு பயிற்சிகளில் ரிஷப் பண்ட் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் பெங்களூருவில் ரிஷப் பண்ட் இந்திய அணியினருடன் சேர்ந்து இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக சின்னசாமி மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த ரிஷப் பண்ட் இந்திய வீரர்களுடன் கலந்துரையாடினார்.
விராட் கோலி, ரிங்கு சிங் ஆகியோருடன் ரிஷப் பண்ட் பேசிக்கொண்டிருந்த வீடியோக்கள் வெளியாகியுள்ளது. ரிஷப் பண்ட் தற்போது காயத்தில் இருந்து மீண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் நிலையில், பெங்களூரு வந்த இந்திய வீரர்களை அவர் சந்தித்துள்ளார்.
அவரின் காயம் தற்போது முழுவதுமாக குணமடையாவிட்டாலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இம்பாக்ட் வீரராக அவர் களமிற்ங்குவார் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் உள்நாட்டு தொடர்களில் கலந்துகொண்டு தனது உடல்தகுதியை அவர் நிரூபிப்பார் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது.