டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்து வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' கோப்பை உருவாக்கப்பட்டது. இந்த கோப்பையை முதலாவது ஆண்டு நியூஸிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், இந்த ஆண்டு இந்த கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
இந்த சூழலில், சில நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் தென்னாபிரிக்கா வாரியம் அந்த நாட்டில் நடக்கும் லீக் போட்டிகளில் முக்கிய வீரர்கள் பங்கேற்க வேண்டும் என நியூஸிலாந்து சுற்றுப்பயணத்துக்கு செல்லும் டெஸ்ட் அணிக்கு இரண்டாம் நிலை வீரர்களை அறிவித்துள்ளது.
இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் 7 பேர் அறிமுக வீரர்களாக இடம் பெற்று நிலையில், சர்வதேச போட்டிகளில் களமிறங்காத நெய்ல் பிராண்ட் என்பவர் தென்னாபிரிக்க கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா வாரியம் நடத்தும் டி20 லீக் போட்டிகளில் ஆடும் வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்ற விதியையும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்துள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் முயற்சி என பல்வேறு தரப்பினரும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், தென்னாப்பிரிக்க அணி நிர்வாகத்தின் இந்த செயல் டெஸ்ட் கிரிக்கெட் அழிவுக்கான தருணமாக இருக்கிறது என விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து கவலைப்படவில்லை என்பது தெளிவாகி விட்டது. அதே நேரம் நான் நியூஸிலாந்து அணியில் இருந்தால் நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டேன். அவர்கள் ஏன் இதில் விளையாட வேண்டும்?
இது போன்ற செயல்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழிவுக்கான தருணமாக இருக்கிறது.இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற முக்கிய வாரியங்கள் ஐசிசியுடன் சேர்ந்து கிரிக்கெட்டின் தூய்மையான வடிவத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும். லாபங்களை மட்டும் வரையறுக்கும் அளவு கோலாக நின்று நாம் அனுமதித்தால், டான் பிராட்மேன், டபிள்யூ.ஜி.கிரேஸ், சோபர்ஸ் போன்றவர்களின் மரபு நியாயமற்றதாகி விடும்" என்று கூறியுள்ளார்.