உலகக்கோப்பை போட்டியில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 26-ம் தேதி பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 318 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்துள்ளது. இதில் 3-வது நாள் உணவு இடைவேளையின் போது மீண்டும் ஆட்டம் தொடங்க தயாரான நிலையில், திடீரென 3-ம் நடுவர் அவரது அறையில் இல்லாததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அனைவரும் 3-ம் நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் என்றே என்று கேட்டுக்கொண்டிருந்த நிலையில், சில நிமிடங்கள் கழித்து தனது அறைக்கு வந்த நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் மைதானத்தின் மற்றொரு தளத்திற்கு சென்று வரும் வழியில் அவர் லிஃப்டில் பாதியிலேயே மாட்டிக்கொண்டதால் தனது அறைக்கு வர தாமதமானதாக தெரிவித்தார். நடுவர் லிஃப்டில் மாட்டிக்கொண்டதால் போட்டி சிறிது நேரம் தடை பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.