இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தனித்துவமான தலைமைப்பன்பாலேயே இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை குவித்ததாக பல்வேறு வீரர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணிக்காக கோப்பையை பெற்றுக்கொடுத்த தோனியை கௌரவிக்கும் விதமாக அவர் அணிந்து விளையாடிய 7-ம் எண் ஜெர்சிக்கு நிரந்தர ஓய்வளிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, "மகேந்திர சிங் தோனி மிகச் சிறந்த வீரர். இந்திய மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பு அளப்பரியது. அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக நம்பர் 7 ஜெர்சிக்கு ஓய்வளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்திய அணியில் இனி 7-ம் எண் கொண்ட ஜெர்சியை எந்த வீரரும் பயன்படுத்த முடியாது. முன்னதாக இதேபோல சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடிய 10- எண் கொண்ட ஜெர்சியையும் எந்த வீரரும் பயன்படுத்தாத வண்ணம் அதற்கும் பிசிசிஐ ஓய்வு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.