உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதோடு நிற்காமல் ஓய்வு பெற்ற வீரர்களுக்கும் லெஜண்ட் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் டி20 தொடர் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு லெஜண்ட் கிரிக்கெட் லீக் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இந்தியா கேபிடல்ஸ் அணியும், குஜராத்தை ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் இந்தியா கேபிடல்ஸ் அணியின் கேப்டனான கவுதம் கம்பீருக்கும், குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்துக்கும் இடையே மைதானத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கம்பீர் என்னை சூதாட்டக்காரர் என்றும், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்ததாகவும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்டு அதில் பேசியுள்ள ஸ்ரீசாந்த், "கம்பீர் என்னை ஃபிக்சர், சூதாட்டக்காரர் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். முதலில் நான் அதனை கவனிக்காவிட்டால், அவர் தொடர்ந்து அவ்வாறு சொன்னார்.
பின்னர் ஆங்கில கெட்ட வார்த்தையை சொல்லியும் திட்டினார். ஆனால், நான் அவரை பார்த்து நான் எந்த ஒரு தரக்குறைவான அல்லது கெட்ட வார்த்தையை பயன்படுத்தவில்லை. சொல்ல முடியாத விஷயங்களை அவர் பேசினார். அவரது தகுதிக்கு அப்படி பேசியதை ஏற்கமுடியவில்லை" என்று கூறியுள்ளார்.