இந்திய கிரிக்கெட்டின் முகமாக கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி மாறியுள்ளார். பல ஆண்டுகளாக சச்சின் எப்படி இந்திய அணியில் இருந்தாரோ அதேபோன்ற ஒரு வீரராக விராட் கோலி தற்போது திகழ்ந்து வருகிறார். சச்சினுக்கு வந்த அதே சறுக்கல் போலவே சில வருடங்களாக முன்னர் விராட் கோலியின் நிலையும் இருந்தது.
சுமார் இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்காத நிலையில், அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை தொடருக்கு விராட் கோலியை அணியில் எடுக்கவே கூடாது என்ற ரீதியிலும் சிலர் தொடர்ந்து கூறிவந்தனர்.
ஆனால், சமீப ஆண்டுகளாக இழந்த தனது பார்மை விராட் கோலி மீட்டு டெஸ்ட், ஒருநாள்,டி20 என தொடர்ந்து அசத்தி வருகிறார். அதிலும் சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பையில் அதிக ரன்குவித்து தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
இதே தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 50வது சதத்தை அடித்து ஒருநாள் போட்டிகளில் அதிக சதமெடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் முறியடித்துள்ளார். தற்போது வரை கோலி சர்வதேச அரங்கில் 80 சதங்களை விளாசியுள்ளார். அடுத்ததாக சர்வதேச அரங்கில் சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையையும் கோலி முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், சச்சின் தெண்டுல்கரின் 100 சதங்கள் உலக சாதனையை கோலியால் முறியடிக்க முடியாது என முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், விராட் கோலிக்கு தற்போது 35 வயது ஆகியுள்ளது. இப்பொது 80 சதங்கள் அடித்துள்ள அவருக்கு சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 20 சத்தங்கள் தேவைப்படுகிறது. ஒருவேளை ஒவ்வொரு வருடமும் 5 சதங்கள் அடித்தால் கூட சச்சின் சாதனையை சமன் செய்வதற்கு அவருக்கு இன்னும் 4 வருடங்கள் தேவைப்படும். அதனால் இந்த சாதனையை முறியடிக்க 4 வருடம் தேவைப்படும்.
20 சதங்களை நிறைய வீரர்கள் தங்களுடைய வாழ்நாளில் கூட அடித்ததில்லை. எனவே விராட் கோலி அதை கண்டிப்பாக செய்வார் என்று நான் சொல்ல மாட்டேன். காரணம் உங்களுடைய வயது எப்போதும் எதற்காகவும் நிற்காது. விராட் கோலி நிறைய சாதனைகளை உடைத்தாலும் சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைப்பது கடினமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.