22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து அர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டம் ஆடியது.
90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 2-2 கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததை அடுத்து, போட்டி கூடுதல் நேர ஆட்டத்திற்கு சென்றது. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில், போட்டி பெனால்டி கிக் முறைக்கு சென்றது. இதில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த உலகக்கோப்பை தொடரோடு மெஸ்ஸி ஓய்வை அறிவித்தாலும், பின்னர் அதை வாபஸ் பெற்று உலகசாம்பியனாக இன்னும் சில ஆண்டுகள் நாட்டுக்காக கால்பந்து போட்டிகளில் விளையாடுவேன் என்று அறிவித்து, தற்போது அர்ஜென்டினா அணிக்காக ஆடி வருகிறார்.
இந்த நிலையில், அடுத்து 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் ஆடுவீர்களா என செய்தியாளர்கள் மெஸ்ஸியிடன் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மெஸ்ஸி, " அதற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. எனவே 2026-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை குறித்து இப்போது நான் யோசிக்கவில்லை.
அதில் பங்கேற்க முடியாமல் போவதற்கு எனது வயது காரணமாக இருக்கலாம். ஆனால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு 2024 ஜூன் மாதம் நடைபெற உள்ள கோபா அமெரிக்கா தொடர் குறித்தே கவனம் செலுத்தி வருகிறேன். அது சாதகமாக அமைந்தால் தொடர்ந்து அடுத்த தொடர் குறித்து கவனம் செலுத்த வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லை என்றால் அது மிகவும் கடினம்.அதன் பிறகு நான் விளையாடுவதை காலம் தீர்மானிக்கும்" என்று கூறியுள்ளார். மெஸ்ஸிக்கு தற்போது 36 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.