இந்திய கிரிக்கெட்டின் முகமாக கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி மாறியுள்ளார். பல ஆண்டுகளாக சச்சின் எப்படி இந்திய அணியில் இருந்தாரோ அதேபோன்ற ஒரு வீரராக விராட் கோலி தற்போது திகழ்ந்து வருகிறார். சச்சினுக்கு வந்த அதே சறுக்கல் போலவே சில வருடங்களாக முன்னர் விராட் கோலியின் நிலையும் இருந்தது.
சுமார் இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்காத நிலையில், அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை தொடருக்கு விராட் கோலியை அணியில் எடுக்கவே கூடாது என்ற ரீதியிலும் சிலர் தொடர்ந்து கூறிவந்தனர்.
ஆனால், சமீப ஆண்டுகளாக இழந்த தனது பார்மை விராட் கோலி மீட்டு டெஸ்ட், ஒருநாள்,டி20 என தொடர்ந்து அசத்தி வருகிறார். அதிலும் சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பையில் அதிக ரன்குவித்து தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவானான பிரையன் லாரா, எனது மகனை விராட் கோலியை பின்பற்றும்படி கூறவிரும்புகிறேன் என்று கூறியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பிரையன் லாரா "என் மகன் ஏதேனும் விளையாட்டில் விளையாட வேண்டும் என்றால், நான் கோலியின் அர்ப்பணிப்பையும், நேர்மையையும் பின்பற்றும்படி கூறுவேன்.
அவர் எப்படி சாதனைக்காக ஆடாமல், அணிக்காக விளையாடி எப்படி நம்பர் ஒன் ஸ்போர்ட்ஸ்மேனாக இருக்கிறாரோ அதனை பின்பற்றுங்கள் என்று சொல்லுவேன். சிலர் இந்தியா உலகக் கோப்பையை வெல்லாத போது கோலியின் சிறந்த ஆட்டம் ஒரு பொருட்டல்ல என்று பலர் சொல்வார்கள். ஆனால், அணியின் வெற்றியே ஒரு தனிநபர் வெற்றியின் துணையால்தானே சாத்தியமாகும் என்பதை மறந்துவிடுகிறார்கள். விராட் கோலி கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியுள்ளார்" என்று கூறியுள்ளார்.