உலகக்கோப்பை போட்டியில் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி பெர்த் நகரிலும், இரண்டாம் நாள் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் நகரில் 26 ஆம் தேதியும், ஜனவரி மூன்றாம் தேதி சிட்னி மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக வரும் புதன்கிழமை நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றில் அணி பங்கேற்கவுள்ளது. இதனிடையே இந்த தொடருக்காக நேற்று பாக்கிஸ்தான் வீரர்கள் மெல்போர்ன் நகருக்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவர்கள் மோசமாக வரவேற்கப்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த ஒரு வரவேற்பும் அளிக்கப்படாத நிலையில், ஆஸ்திரேலிய வாரியம் சார்பில் யாரும் விமான நிலையத்துக்கும் வரவில்லை. அதோடு பாகிஸ்தான் வீரர்களின் உபகரணங்களை கொண்டு செல்ல யாரும் அனுப்பப்படவில்லை.
மேலும், பாகிஸ்தான் வீரர்களின் உபகரணங்களை கொண்டுசெல்ல ட்ரக் வாகனம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் தாங்கள் கொண்டுவந்திருந்த உபகரணங்களை பாகிஸ்தான் வீரர்களே ஏற்றி பின்னர் பேருந்தில் புறப்பட்டு சென்றனர். இது குறித்து வீடியோகள் இணையத்தில் வெளியான நிலையில், பலரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர்.