இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்தியா சிறப்பாக செயல்பட்ட நிலையில், இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம்வீரர்களோடு களமிறங்கிய இந்திய அணி முதல் இரண்டு டி 20 போட்டிகளில் வென்று, மூன்றாவது போட்டியில் இறுதிக்கட்டத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியைத் தழுவியதும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் கண்கலங்கி அழுதார்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இந்திய அணியில், அனுபவம் வாய்ந்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என இரண்டு தலைவர்கள் இருந்தார்கள். உலகக்கோப்பை தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.
தோனி போல, ரோஹித் ஷர்மாவும் சிறந்த கேப்டன். உலகக்கோப்பையில் அவர் நிறைய முயற்சிகளைச் செய்தார். அணிக்காக தனது தூக்கத்தை தொலைத்தார். எல்லோருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார். 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் எதிரணியை பயமுறுத்துவோம் என்றார். ஆனால் இறுதியில் அணி தோல்வியடைந்த போது, ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் கண்கலங்கி அழுதார்கள்" என்று கூறியுள்ளார்.