கடந்த 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இதில்முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.பின்னர் ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதோடு இந்த தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமானதாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இது போன்ற காரணங்களால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
இந்த நிலையில், நாட்டுக்காக அல்லாமல் பணத்துக்காக இலங்கை வீரர்கள் ஆடுவதே அணியின் இந்த மோசமான செயல்பாட்டுக்கு காரணம் என அணி வீரர்களை இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "எங்கள் காலத்தில் நாங்கள் விளையாடும் போதெல்லாம் நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற உணர்வு இருந்தது. ஆனால், இப்போது இலங்கை அணி வீரர்களுக்கு அந்த எண்ணம் துளியும் இல்லை. அனைவரும் தற்போது பணத்திற்காக தான் விளையாடுவதால், நாட்டிற்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மாறி பணத்தைத் தேடி வீரர்கள் செல்ல தொடங்கி விட்டார்கள்.
இப்போது ஒரு டெஸ்ட் போட்டி விளையாடினால் இலங்கை அணி வீரர்களுக்கு 25 லட்சம் இலங்கை ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது. ஆனால் நான் 1992 ஆம் ஆண்டு விளையாடும்போது வெறும் 2000 ரூபாய் தான் இலங்கை காசு கிடைத்தது. தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடிய பிறகுதான் எங்களுக்கு பணம் கிடைத்தது. தற்போது உள்ள இளைஞர்களுக்கு பல வெளிநாட்டு தொடர்களில் அதிக பணம் கிடைக்கிறது என்பதற்காக அதை தேடி செல்கிறார்கள். நாட்டை அனைத்து வீரர்களும் விட்டுவிடுகிறார்கள்.
ஐபிஎல் தொடரில் மட்டும் தான் விளையாட வேண்டும் என்ற விதியை அந்நாட்டு வீரர்களுக்கு இந்தியா விதித்து இருக்கிறது. இதே போல் ஒரு முடிவை இலங்கையும் கொண்டு வர வந்து இலங்கை பிரிமீயர் லீக் தொடரில் மட்டும் தான் வீரர்கள் விளையாட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தால்தான் அனைத்தையும் சரி செய்ய முடியும். இலங்கை அணியின் செயல்பாடு என் மனதுக்கு அவ்வளவு வலியை தருகிறது" என்று கூறியுள்ளார்.