நேற்று டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.
இதில் நான்காவது விக்கெட்டாக இலங்கை வீரர் சமரவிக்ரமா ஆட்டமிழந்த நிலையில், அடுத்த வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், அவரின் ஹெல்மெட்டில் ஸ்டிராப்ஸ் சரியில்லாத காரணத்தால் மைதானத்துக்கு வந்து வேறு ஹெல்மெட்டை கேட்டுள்ளார். அதன்படி இலங்கை வீரர் ஒருவர் ஹெல்மெட்டை கொடுத்துள்ளார்.
இதனால் அவர் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் இது குறித்து வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவரிடம் புகாரளிக்க விதிப்படி ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் என்ற வகையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்த முறையில் ஆட்டமிழந்த முதல் வீரராக மேத்யூஸ் மாறியுள்ளார்.
இந்த போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்ற நிலையில், அந்த வீரர்களிடம் கைகொடுக்க இலங்கை வீரர்கள் மறுத்து ஓய்வறைக்கு சென்றனர். இதன் காரணமாகி இந்த போட்டியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த போட்டி முடிந்த பின்னர் இது குறித்துப் பேசிய வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன், "நடுவரிடம் முறையிட்டால் மேத்யூஸ் வெளியேற வேண்டும் என எங்கள் அணியின் வீரர் ஒருவர் என்னிடம் தெரிவித்ததால் நான் நடுவரிடம் முறையிட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேனா என நடுவர்கள் கேட்டார்கள். இந்த வகை அவுட் கிரிக்கெட் விதிகளில் உள்ளது. அது சரியா, தவறா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை. அணியின் வெற்றிக்காக நான் அந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது. இது குறித்த விவாதங்கள் இருக்கும். ஆனால், அது விதிகளில் உள்ளது. அதனால் அந்த வாய்ப்பினை பயன்படுத்துவதில் எனக்கு கவலையில்லை" என்று கூறினார்.
அதே போல இது குறித்துப் பேசிய ஏஞ்சலோ மேத்யூஸ், " விதிகளின்படி, இரண்டு நிமிடங்களில் நான் தயாராகி கிரீஸுக்குள் வந்துவிட்டேன். ஆனால், ஹெல்மெட்டில் திடீரென பிரச்சினை வந்துவிட்டது. ஹெல்மெட்டின் பட்டை கிழிந்துவிடும் என்பது எனக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்? வீரர்களின் பாதுகாப்பை பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். அதே நேரம் நான் ஹெல்மெட் இல்லாமல் அல்லது பிரச்சினையான ஹெல்மெட் உடன் ஆட வேண்டும் என கூறுகிறார்களா?
எனக்கு இழைக்கப்பட்டது அநீதி. அது விதிமுறைகளுக்கு இருந்தாலும் பரவாயில்லை. ஹெல்மெட் மாற்றுவதற்கு கேட்டு ஹெல்மெட் வந்தபின்னும் இரண்டு நிமிடங்களுக்கு மீதம் ஐந்து நொடிகள் இருந்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. நடுவர்கள் டிவி அம்பயருடன் ஆலோசித்து முடிவெடுத்திருக்கலாம்.
என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்காக வங்கதேசத்தைப் போல ஒரு அணி கீழே இறங்கியதை பார்க்கவில்லை. ஷகிப் மற்றும் வங்கதேசத்திடம் இருந்து வெளிப்பட்ட அவமானகரமான செயல் இது. ஷகிப் நினைத்தால் அப்பீலை வாபஸ் வாங்கியிருக்க முடியும். போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை என்பது இப்போது பிரச்சினையாகிறது. நம்மை மதிப்பவர்களுக்கு தான் பதில் மரியாதை கொடுக்க முடியும். அதை விடுத்து அடிப்படை அறிவு இல்லாமல் செயல்படுபவர்கள் எங்களிடம் பதில் மரியாதையை எதிர்ப்பார்க்கக் கூடாது" என காட்டமாக கருத்து தெரிவித்தார்.