இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை லீக் போட்டியில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில், தென்னாபிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சினின் 49-சதம் என்ற சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
எனினும், இந்த போட்டியில் விராட் கோலி சதத்துக்காக மெதுவாக ஆடியதாக விமர்சனம் எழுந்தது. அதே நேரம் இத்தகைய மெதுவாக மைதானத்தில் கோலி நிதானமாக ஆடிய காரணத்தால்தான் இந்திய அணியால் இவ்வளவு பெரிய ரன்களை குவிக்க முடிந்தது என கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
கோலியின் இந்த இன்னிங்ஸ் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ், " விராட் கோலியின் ஆட்டத்தில் நான் சுயநலத்தை பார்த்தேன். இது இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக நடக்கவில்லை. 49 ஆவது ஓவரில் அவர் சுயநலத்துடன் சதம் அடிப்பதற்காக சிங்கிள் எடுததார். இதன் மூலம் அணியின் நலனுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தெரிகிறது" என்று விமர்சித்திருந்தார்
இந்த நிலையில், அவரின் இந்த கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த அவர், "விராட் கோலிக்கு கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்ற வேலைதான் கொடுக்கப்பட்டிருந்தது.
ஏனெனில் ஆடுகளம் அந்த அளவு சவாலாக இருந்தது. கோலியின் ஆட்டம் காரணமாகதான் 200 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், இது புரியாமல் விராட் கோலி சுயநலத்துடன் விளையாடினார் என்று பேசியிருப்பது முட்டாள்தனமான கருத்து" என்று கூறியுள்ளார்.