கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்த ஒரே வீரராக திகழ்ந்து வருகிறார். மேலும் சரவதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ரன்களை கடந்து யாரும் படைக்காத சாதனைகளை படைத்துள்ளார்.
அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள் என கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். அதோடு ஒரு நாள் போட்டியில் 200 அடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல் ஆளாக அதை கடந்து அனைத்தும் முடியும் என்று நிரூபித்தார்.
ஆனால் நேற்று நடைபெற்றப் போட்டியில் சச்சினின் ஒரு சாதனையை இந்திய வீரர் விராட் கோலி சமன் செய்தார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சச்சினின் 49-சதம் என்ற சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்கள் அடித்த நிலையில், விராட் கோலி வெறும் 277 இன்னிங்ஸ்களில் சச்சினின் இந்த சாதனையை சமன் செய்துள்ளார். தனது சாதனையை சமன் செய்த விராட் கோலி குறித்துப் பேசிய சச்சின், "சிறப்பாக ஆடியிருக்கிறீர்கள் விராட்.
என்னுடைய 49 லிருந்து 50 ஐ எட்ட எனக்கு ஒரு வருடம் பிடித்தது. ஆனால், உங்களுக்கு அப்படியிருக்கப் போவதில்லை. 49 லிருந்து 50 ஐ இன்னும் சில நாட்களில் நீங்கள் எட்டி என்னுடைய சாதனையை முறியடித்துவிடுவீர்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துகள்! " என்று கூறியுள்ளார்.