ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா, பின்னர் நீண்ட நாட்களுக்கு பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார்.
அதன்பின்னர் ஆசிய கோப்பை போட்டியில் திறம்பட செயல்பட்ட அவர், தற்போது உலகக்கோப்பை தொடரிலும் அசத்தி வருகிறார். தற்போது வரை உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் வகிக்கிறார்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஜஸ்பிரித் பும்ரா போல பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் ஏன் பந்துவீச முடியவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " உண்மையில் இது பதில் சொல்ல கடுமையான கேள்வி. பும்ரா போல பந்து வீச இப்போது உலகில் யாரும் இல்லை. அவர் டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்று அங்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ஒருநாள் போட்டியை போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பும்ரா வெற்றியாளராக திகழ்கிறார். அதுதான் அவரின் வெற்றிக்கு காரணம். அங்கு சிறப்பாக செயல்பட்டால் ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக செயல்பட முடியும். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் குறைந்த அளவிலானடெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடுகிறார்கள். இதுதான் இருவருக்கும் பிரச்சனை. வழக்கத்துக்கு மாறான பந்துவீச்சோடு, வேகம், யார்க்கர், பவுன்சர் என அனைத்து திறனையும் கொண்ட முழுமையான பந்து வீச்சாளராக பும்ரா திகழ்வதே அவரின் வெற்றிக்கு காரணம்" எனக் கூறியுள்ளார்.