4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
50 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி8 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. அந்த அணியில் வார்னர் 104 ரன்களும், 40 பந்துகளில் சதமடித்த மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 106 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி, 21 ஓவர்களில் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டிக்கு பின்னர் பேசிய மேக்ஸ்வெல் மைதானத்தில் ரசிகர்களுக்காக நடத்தப்படும் லேசர் லைட் ஷோ நிகழ்ச்சியில் விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இடைவேளையின் போது, மைதானத்திலிருந்த மின்விளக்குகளை முழுக்க அணைத்துவிட்டு லேசர் லைட் ஷோ நடத்துவது முட்டாள்தனமான யோசனை. இப்படி திடீரென மாறும் வெளிச்சத்துக்கு உடனடியாக கண்களை அட்ஜஸ்ட் செய்வது கடினமாக இருக்கிறது.
இதற்கு முன்னர் பெர்த் மைதானத்தில் லைட் ஷோ நடந்தபோது, கண்களை உடனடியாக அந்த வெளிச்சத்திற்கு அட்ஜஸ்ட் செய்து கொள்வதற்கு சிரமப்பட்டேன். இதன் காரணமாக எனக்கு தலை வலியே வந்துவிட்டது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருந்தாலும், வீரர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், லேசர் லைட் ஷோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனை நான் ரசித்தேன். எல்லாமே ரசிகர்களுக்காகத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் நாம் விரும்பும் கிரிக்கெட்டை எப்போதும் நிறைவாக ஆட முடியாது" என்று கூறியுள்ளார்.