4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் விரைவில் வெளியேறினார். பின்னர், களமிறங்கிய ஸ்மித் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் இந்த தொடரில் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.
சதமடித்த கையோடு வார்னர் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லபுசேனே 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, இங்கிலீஸ் 14 ரன்களுக்கும், க்ரீன் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால், மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
44 பந்துகளில் 106 ரன்கள் குவித்த மேக்ஸ்வெலின் அதிரடியால், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்து அணி, ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியில் விக்ரம்ஜித் சிங் மட்டுமே 25 ரன்கள் குவித்தார். மற்றவர்கள் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி இறுதியில் 21 ஓவர்களில் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட் வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.