சமீப காலமாக இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக இளம்வீரர் சுப்மான் கில் உருவாகியுள்ளார். கவாஸ்கர்,சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறப்பாக ஒரு மட்டைவீச்சாளரை இந்தியா தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், கோலிக்கு பின்னர் அந்த இடத்துக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்தது.
தற்போதைய நிலையில், கோலிக்கு பின் இந்திய மட்டைவீச்சை வழிநடத்துபவராக சுப்மான் கில் இருப்பார் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தற்போது உலகக்கோப்பை அணியிலும் இந்திய அணியின் தொடக்க வீரரான களமிறங்கிய ஆடி வருகிறார். இந்த நிலையில், சுப்மன் கில் என்ற வீரரின் 90 சதவிகித திறமையை தான் இதுவரை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். யாரும் 100 சதவிகித திறமையை கண்டதில்லை என சுப்மான் கில் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "என்னை பொறுத்தவரை 3 ஆட்டங்களில் சரியாக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், அடுத்த 3 போட்டிகளில் ரன்கள் குவிப்பேன் என எனது மனநிலையை மாற்றிக்கொள்வேன். சரியாக ரன்கள் சேர்க்க முடியவில்லை என்று அணுகுமுறையையும், மனநிலையையும் மாற்றிக் கொண்டால், அதிகமாக சொதப்புவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த காபா டெஸ்ட் போட்டியில் சதமடிக்க வாய்ப்பு கிடைத்ததை தவறவிட்ட பின், முதல் சதத்தை விளாச வேண்டும் என்று தீவிரமாக இருந்தேன். இதனால் எனக்கு நானே அழுத்தத்தை ஏற்றிக்கொண்டேன். சுப்மன் கில் என்ற வீரரின் 90 சதவிகித திறமையை தான் இதுவரை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். யாரும் 100 சதவிகித திறமையை கண்டதில்லை. அது வெறும் திறமை சார்ந்தது அல்ல. அதுவொரு வகையான மனநிலை என்று கூற வேண்டும்" என்று கூறியுள்ளார்.