4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் தொடர்ந்து அபாரமாக ஆடிவரும் இந்திய அணியும், நியூஸிலாந்து அணியும் நேற்று தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 48 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
இந்த போட்டியில், பனி காரணமாக ஆட்டம் 15 நிமிடம் நிறுத்தப்பட்டது வித்தியாசமான நிகழ்வாக அமைந்தது. பொதுவாக கிரிக்கெட் ஆட்டம் மழை, போதிய வெளிச்சம் இல்லாமை போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் தரம்சாலா மைதானத்தில் பனி காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது அநேகமான சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் இமயமலை பகுதியில் தரம்சாலா மைதானம் அமைந்துள்ளது. இந்து தற்போது அதிகமான பனி பெய்து வரும் நிலையில், இந்தியா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 15.4 ஓவர்களில் மைதானத்தில் பனி மூட்டம் அதிகரித்தது.
இதன் காரணமாக, போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், போட்டி நடுவர்கள் ஆட்டத்தை சிறிது நேரம் ஒத்திவைத்தனர். பின்னர் பனி குறைந்த 15 நிமிட இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கி நடைபெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் அபூர்வ நிகழ்வான இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.