5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தினமும் ஒரு நாட்டு வீரர்களுடன் மற்ற நாட்டு வீரர்கள் விளையாடி வருவர்.
அந்த வகையில் நேற்றைய தினம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்' நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 191 ரன்கள் எடுத்தது.
இதனால் 192 ரன்கள் வெற்றி இலக்கை குறி வைத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் ஆட்டத்தால், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுடன் மோதி, இந்தியா வென்றதற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரரிடம் இந்திய ரசிகர்கள் மோசமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
இந்த ஆட்டத்தின்போது பாகிஸ்தான் பேட்டிங் செய்துகொண்டிருந்த சமயத்தில், பாக். அணி வீரரான முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து, பெவிலியன் நோக்கி திரும்பி சென்றுகொண்டிருந்தார். அப்போது ஸ்டேடியத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் சிலர், ரிசவானை நோக்கி, "ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்.." என்று கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. இந்தியாவில் போட்டிக்கு வரும் மற்ற நாட்டு வீரர்களை இதுபோல் அவமரியாதையாக நடத்தக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா விளையாட்டுத்திறன் மற்றும் விருந்தோம்பலுக்கு புகழ்பெற்றது. ஆனால், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், பாகிஸ்தான் வீரருக்கு எதிராக நடந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதவை. விளையாட்டு என்பது நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கவேண்டும்; சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டுமே தவிர, வெறுப்பை பரப்பும் கருவியாக இருக்கக்கூடாது; அவை கண்டிக்கத்தக்கது.” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.