ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது. அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கிய சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கிய இந்த போட்டிகள் வரும் அக்டோபர் எட்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனத் தைபே அணியை 25-26 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. இந்த பதக்கம் இந்த ஆசிய தொடரில் இந்தியா வெல்லும் 100-வது பதக்கமாக அமைந்துள்ளது. தற்போது வரை இந்தியா 25 தங்கம் 35 வெள்ளி 40 வெண்கலம் ஆகியவற்றை வென்றுள்ளது. அதோடு பதக்கபட்டியலில் 4-வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.
இன்னும் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி, மல்யுத்தம் போன்ற போட்டிகள் இருப்பதால் இந்தியா இன்னும் அதிக பதக்கங்கள் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் இந்தியா இதுவரை வென்றுள்ள பதக்க எண்ணிக்கையே இதுவரை ஆசிய போட்டிகள் வரலாற்றில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும்.
இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018-ல் ஜகார்த்தாவில் நடந்த போட்டியில் இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலத்துடன் 70 பதக்கங்கள் வென்றிருந்தது. அதற்கு முன்னதாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என 57 பதக்கங்களை வென்றிருந்தது.