ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.கடந்த 2018-ம் ஆண்டு 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.அந்த வகையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கிய சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கிய இந்த போட்டிகள் வரும் அக்டோபர் எட்டாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்கள் சீரான அளவில் பதக்கங்களை வென்று வந்தது. அதிலும், மகளிர் கிரிக்கெட், ஸ்குவாஷ், டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் 6 தங்கம், 8 வெள்ளி , 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியது.
இந்த நிலையில், ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தய இறுதிப் போட்டியில் இந்தியாவின் இரு போட்டியாளர்களான கார்த்திக் குமார் மற்றும் குல்வீர் சிங் ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளனர்.
இந்த பதக்கம் மூலமாக பதக்கப்பட்டியலில் இந்திய அணி 10 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற ஆசிய போட்டிகளிலேயே இந்த முறைதான் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.