ஆஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி, மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
அதன்பின்னர் நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன் காரணமாக ஒருநாள் போட்டி தொடரையும் ஆஸ்திரேலிய அணி எளிதாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 3-வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசரவைத்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது. இதனால் தொடர் 2-2 என சமநிலைக்கு வந்தது.
இந்த நிலையில், தொடரை வெல்வது யார் என்பதை முடிவு செய்யும் 5-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பெர்கே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய தென்ஆப்பரிக்கா அணி மார்க்ராம் 93, மில்லர் 63 ஆகியோரின் அதிரடியோடு 50 ஓவர்களில் 315 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதன் மூலம் 0-2 என்ற நிலையில் இருந்து 3-2 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியின் காரணமாக எதிர்வரும் உலககோப்பை தொடரில் தென்னாபிரிக்க அணி பலம் வாய்ந்த அணியாக காட்சியளிக்கிறது.