நேற்று நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், அந்த அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் பும்ரா விக்கெட் வீழ்த்திய நிலையில், நான்காவது ஓவரில் சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் நம்பிக்கையை அங்கேயே முடிவுக்கு கொண்டு வந்தார்.
பின்னர் தனது அடுத்த ஓவரில் சிராஜ் அடுத்த விக்கெட்டை வீழ்த்த 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. அதன் பின்னரும் தொடர்ந்து இந்திய வீரர்கள் அசத்த இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 51 ரன்கள் இலக்கோடு ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் கில் ஆகியோர் அதிரடி தொடக்கம் தந்தனர். இதனால் இந்திய அணி 6.1 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்று ஆசிய கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய சிராஜ், " இந்த போட்டியில் என்னுடைய சிறந்த ஸ்பெல்லை வீசியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பரிசுத்தொகையை மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்குகிறேன். அவர்கள் இல்லாமல் இந்த போட்டி நடந்திருக்காது. என்னைவிட சிறப்பாக செயல்பட்டவர்கள் அவர்கள்தான்" என்று பேசியுள்ளார். அதன்படி தனக்கு வழங்கப்பட 4.15 லட்சம் ரொக்கத்தொகையை சிராஜ் மைதான ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். மேலும் காசோலைக்கான தொகையை மைதான பராமரிப்பாளர்களுக்கு வழங்கி அதை புகைப்படமாகவும் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த தொடர் பாகிஸ்தான் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டதும் பல போட்டிகள் மழை காரணமாக நடத்த முடியாமல் போகும் என்ற அச்சம் எழுந்தது. ஆனால், மைதான பராமரிப்பாளர்களின் முயற்சியால் பல்வேறு போட்டிகளில் முடிவுகள் எட்டப்பட்டன. இதனால் சமூக வலைத்தளங்களில் இலங்கை மைதான பராமரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதன் தொடர்ச்சியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இரண்டும் சேர்ந்த மைதான ஊழியர்களின் உழைப்புக்காக 41 லட்சம் தொகையை பரிசாக வழங்குவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.