ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய துவக்க வீரர்கள் கில், மற்றும் ரோஹித் சர்மாசிறப்பான தொடக்கத்தை வழங்கினர்.
ரோஹித் சர்மா 56 ரன்களுக்கும், கில் 58 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 24.1 ஓவர்களுக்கு இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று போட்டி தொடங்கிய நிலையில், கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருவரும் அரைசதம் கடந்த பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஓய்வுக்கு பின்னர் சுமார் 3 மாதத்துக்கு பிறகு களத்துக்கு திரும்பிய கே.ராகுல் இந்த போட்டியில் சதமடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே கோலியும் ஒருநாள் போட்டியில் தனது 47-வது சதத்தை கடந்தார்.
இவர்களின் இந்த அதிரடி காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும், கே.எல்.ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும் குவித்தனர்.பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது கோலி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை குல்தீப் யாதவுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் கம்பீர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், விராட் கோலியும், கே. எல் ராகுலும் நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் குல்தீப் யாதவை ஆட்டநாயகனாகத் தேர்வு செய்திருக்க வேண்டும்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது அவரின் தரத்தை காட்டுகிறது. அவர் சுழற் பந்துவீச்சிற்கு எதிராக சிறப்பாக விளையாடும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் அவருக்குத்தான் ஆட்டநாயகன் விருதை கொடுத்திருக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.