ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் களைகட்டவுள்ளது.
இதற்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி முடிந்தவுடன், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையில் விளையாடி வரும் 17 வீரர்களில் 15 பேர் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரராக இலங்கை சென்றுள்ள சஞ்சு சாம்சனுக்கு பதில் கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .
காயத்திலிருந்து மீண்டு உடல் தகுதி சோதனையில் நிரூபித்ததன் மூலம் ராகுல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் இடம்பெறாத ராகுல் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயஸ், சூரியகுமார் என பேட்டிங் வலுவாக அமைந்துள்ளது. மேலும் ஜடேஜா, பாண்டியா, ஷர்துல், அக்ஷர் படேல் என நான்கு வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஹலுக்கு கடைசி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. காயத்திலிருந்து அணிக்கு திரும்பியுள்ள பும்ரா மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முகமது சமி, சிராஜ் ஆகியோர் இவருக்கு பக்கபலமாக செயல்படவுள்ளனர். அறிமுக உலகக் கோப்பையில் திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றுக்குள் உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது