அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டு வீரர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார்.
இவர் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசை போட்டியில் 2 வது இடத்தில் உள்ள அமெரிக்கா வீரர் ஃபேபியானோ கருனாவிடம் மோதி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதனால் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என்ற என்பது ஒவ்வொரு இந்தியர்களின் ஆசையாக இருந்தது.
இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதினார். இந்த இறுதிப்போட்டி மூன்று சுற்றுகலாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்று 3 மணி நேரம் நடந்தும் டிராவில் முடிவடைந்தது. இதில் ஆரம்பத்திலிருந்தே உலகின் முதல் நிலை வீரர் கார்ல்சனுக்கு பிரக்ஞானந்தா கடும் நெருக்கடி கொடுத்தார்.
இதனை அடுத்து நேற்று இரண்டாவது சுற்று நடந்தது. இதில் 30வது நகர்த்தலில் ஆட்டத்தை டிரா செய்ய இருவரும் ஒப்புக் கொண்டார். இதனால் இரண்டாவது சுற்றும் டிரா ஆனது. இதனால் மூன்றாவது சுற்று டை பிரேக் முறையில் இன்று தொடங்கியது.
இந்த சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதையடுத்து உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் கார்சல்ன் வென்றார். கடுமையாகப் போராடி பிரக்ஞானந்தா வெற்றி வாய்ப்பை இழந்தார். 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ரூ.67 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.