FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்றது. அதன் லீக் போட்டிகள் முடிவடைந்து நிலையில், ஜெர்மனி, கனடா, பிரேசில் போன்ற முக்கிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின .
இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. இதில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியில், முதல் முறை உலகக்கோப்பை வெல்ல ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இதில் ஸ்பெயின் அணியின் கேப்டன் ஓல்கா கார்மோனா 29-வது நிமிடத்தில் வெற்றிக்கான ஒரே கோலை அடித்து அணியை சாம்பியனாக்கினார். இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் வீராங்கனைகளும், கேப்டன் ஓல்கா கார்மோனாவும் மகிழ்ச்சியில் வெற்றியை கொண்டாடிய தருணத்தில், அவரின் தந்தை இறந்த அதிர்ச்சி தகவல் அவரை எட்டியது.
இறுதிப்போட்டிக்கு முன்னரே கேப்டன் ஓல்கா கார்மோனாவின் தந்தை இறந்தாலும், அது குறித்து அவரின் உறவினர்கள் எந்த தகவலும் ஓல்காவுக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்த துக்கம் அவருக்கு தெரிந்தால் அவரின் ஆட்டம் பாதிக்கப்படும் என்பதால் போட்டி முடிந்த பின்னரே அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போட்டிக்கு பிறகு ஓல்கா கார்மோனா வெளியிட்ட சமூகவலைத்தள பதிவில், "இன்றிரவு நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் என்னை பற்றி பெருமைப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நிம்மதியாக இருங்கள் அப்பா" என்று குறிப்பிட்டுள்ளார். தங்கள் நாட்டுக்கு முதல்முறை உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேப்டனின் தந்தை இறந்துள்ளது ஸ்பெயின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.